Tuesday, 28 February 2012

உனக்கான முத்தங்கள் இன்னும்
இருக்கின்றன..
பலமுறை தந்துவிட எண்ணி
தரத் தயங்கியவை...
ஒருமுறை ஏதோ சோகத்தில்
நீ தவித்தபோது,
இன்னொரு சமயம்
கட்டுப்பாடில்லாத உன் அன்பினால்
எனைக் கட்டியபோது,
நெகிழ்ந்து போய்..
மற்றொருமுறை,
குழந்தை போல்
தலை சாய்த்து சிரித்த போது..
ஏன் இன்றும் கூட
உன்னிடம் மொத்தமாய் தந்துவிட
நினைத்தேன்,
வழக்கம் போல் இதையும்
சேர்த்து வைத்துவிட்டேன்!

Friday, 24 February 2012

கோபம்


உலர்ந்து போன கறையைப்போல்
உன் கோபம்
லேசில் போவதில்லை!
தவறு உன் மீதாயினும்
என் மீதாயினும்
கோபம் மட்டும் உன்னுடையது!
என் மௌனம்
மெல்ல மெல்ல வீட்டிலும் நிரவி
நிசப்தமகிப் போனது .
ஜன்னலுக்கு வெளியே மட்டும்
சந்தோஷமாய் மனிதர்கள்

Thursday, 23 February 2012

தோழி எழுதியதாய்
என் எண்ணம் வடித்ததை
காண்பித்த பின் தான் உணர்ந்தேன்,
உனக்கு கவிதையும் தெரியவில்லை,
என் காதலும் புரியவில்லையென!

சொல்லிவிடு

தினம் தினம் 
சொல்ல நினைப்பதை விழுங்கி,
வேறெதோ கதைகள் பேசி 
கிளம்பும் நேரம் 
போலியாய் சிரித்ததெல்லாம் போதும்,
இன்றாவது சொல்லிப்போ! 


இத்தனை படங்கள் பார்த்தும்,
ஆயிரம் கதைகள் படித்தும்,
இன்னுமா தோணவில்லை
எப்படி என்னிடம் சொல்வதென்று?

காற்றும் தூலுமாய்
எத்தனை அழகான மாலை,
இப்பொழுதே சொல்லிவிடேன்,
இதைவிட அருமையான மாலை நேரங்கள் 
நான் தருகிறேன்!


உனக்குப் பிடித்த சேலையில்
மெல்லமாய் வருகிறேன்..
சீக்கிரம் யோசித்து வை,
எப்படியும் இன்று சொல்லிவிடுவதென்று!


உன் கண்கள் சொல்வதை 
உதடுகள் சொல்லாதோ?
இருவர் காதலையும் 
ஒருத்தியை சுமப்பது போல் 
பாரமாய் இருக்கிறது..
சீக்கிரம் சொல்லேன்!


முதலில் ஒருமுறை நீ சொல்லிவிடு
இனி,,
தினம் தினம் நானே சொல்கிறேன்!

Friday, 3 February 2012

மழை


தூறலாய் பெய்யும் நேரம்
நனைய அழைக்கும் எனை!
சாரலைத் தூவும் போது
குடையோடு வாவெனும்,
பெருமழையாய் கொட்டும் நேரம்
ஜன்னலோரம் அமரச் செய்யும்!
எப்படி பெய்யினும் 
மழையோடு தான் மனம்!

நட்பு


துரியோதனன்,
எடுக்கவோ, கோர்க்கவோ 
எனக்கேட்காமல்,
எதைக்கேடிருந்தலும் 
இழந்திருப்பான் கர்ணனை!
நட்பின் அடிநாதம் 
நம்பிக்கை!

குழந்தை:


பிஞ்சு முகம்தனைப் பார்க்கையிலே
நெஞ்சு முழுதும் பஞ்சாகுதே!
அதன் பிஞ்சுக் விரல்கள்  தீண்டிவிடின் 
இறைவனைத் தீண்டிய இன்பம் காண்!.
அதன் அழைப்புகளெல்லாம் இசை!
மொத்தத்தில் மடியில் தவழும்
மலர்க்கூட்டம், குழந்தை!

முயற்சி


முயல் ஆமை 
கதைக்குப் பின் தான்,
ஆமையின் விடாமுயற்சி கண்டு, 
முயலுக்கு "முயல்"
என்ற பேர் வைத்தனரோ!
முயன்றால் முடியததென்ன?! 

தாய்


     

இவ்வுலகின்  அத்தனை 
இல்லங்களிலும் நிறைந்திருக்கும் 
இறைவனுக்கு
ஒரே பெயர் தான்,
'தாய்'