தனியே புன்னகைக்கும் வேளையில்
பொத்தி வைத்த பதிவுகளைப்
படித்து பார்த்தேன்!
இலக்கணங்களை மீறித்தான் கிடந்தது
உன் மீதான அன்பின்
எழுத்து வடிவங்கள்!
என்னைப்போலவே..
அகமும் முகமும் மலர்ந்தே இருக்க
அற்புதமென அனைத்தையும் கொண்டாடினோம்..
ஆனந்தமாய் இருப்பதே அடையாளமென
ஆழ்மனதுள் அன்பைமட்டுமே சுமந்தோம்..
இல்லத்தைக் காட்டிலும் இனிதானது நம்
இருக்கை என இறுமாந்திருந்தோம்!
ஈக்களைப் போல் அங்கிங்கெனாதபடி
எங்குமிருந்தோம்..
உன்னைச் சொன்னால் என்னையும் என
உடன் நின்ற நேரமெல்லாம் மறக்குமோ!
ஊரும் உறவும் பிரமித்தனர் நம் நட்பு கண்டு..
என்னைச்சுற்றி இருப்பதெல்லாம் உன்னுடையவைகளாக..
ஏனென்று கேள்வி எழாத நம்பிக்கைகளுடன்,
ஐயம் ஏதுமிலா திறந்த புத்தகமென வாழ்ந்தோம்..
ஒப்பிட்டு சொல்லும் நட்பிற்கு உதாரணமானோம்..
ஓய்வறியா மனமும் அடங்கும் உன் அருகில்
ஒளஷதமொன்று யாருக்கும்தேவையில்லை
இப்படி ஒரு அன்பு அமைந்தால்..🙏
——
இத்தனை வருடமாய்,
எத்தனை முறை பார்த்திருந்தாலும்
இப்பொழுதும் உனைக்கண்டவுடன்
விரியும் கண்களையும்
மலரும் புன்னகையையும்
மறைக்க முடிவதேயில்லை..
குதூகலிக்கும் மனம் மட்டும்
வெளியே அமைதியாய்..❤️❤️❤️
ஒரு தேடலில் ஆரம்பித்த உறவு
வேறொரு தேடலை முடித்து வைத்தது..
முகமறியா நபராய் நுழைந்து
என் உள்முகமாய் ஆகிவிட்டாய்..
ஜென்மஜென்மமாய் தொடர்வது
போல் ஒரு பிரியம்..
ஒற்றை வருடம் தானெனில்
நம்பத்தான் முடியவில்லை..
ஒவ்வொரு நினைவிலும்-உன்
பெயரெழுதிவிட்டாய்!
நினைவொன்று தோன்றுமுன்
பகிரத்துடிக்கும் - மனம்
அறிந்துவிட்டது போலும்
அடையும் இடம் எதுவென்று..
நாட்களை ஸ்வாரஸ்யமாக்குவது
நித்தம் பேசும் சிலமணித்துளிகள் தாம்..
அது மற்றவர் அறியா
ரஹஸ்யங்களாகட்டும்..
ஊரறிந்த செய்தியாகட்டும்,
ஒவ்வொரு வார்த்தையும் ரசனை தான்..
வார்த்தைகளூடே வெளிப்படும்- உன்
சிரிப்பிற்கென வாழ்வை எழுதிக்கொடுக்கலாம்..
அன்பின் வெளிப்பாடெல்லாம்
தேவையில்லை என்றாலும்
சொல்லித்தானாக வேண்டும்..
உனைத்தாண்டி இனி வெறெதுவும்
வேண்டேனென்று..
ஒரு ஆயுளுக்கான தேடலின்
முடிவு நீ..